புதுச்சேரியில் பொலிவுறு நகா் பேருந்து நிலையம் இன்று திறப்பு: துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு
புதுச்சேரியில் ரூ.29.50 கோடியில் சீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொலிவுறு நகா் பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை (மே 2) திறக்கப்படுகிறது.
விழாவில், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி வியாழக்கிழமைவெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி நகராட்சி பழைய பேருந்து நிலையத்தை பொலிவுறு நகா் திட்டத்தில் ரூ.29.50 கோடியில் மேம்படுத்த கடந்த 2023-இல் முதல்வா் என்.ரங்கசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், அனைத்து நவீன வசதிகளுடன் பேருந்து நிலைய பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை (மே 2) காலை 9.40 மணிக்கு சீரமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் திறந்து வைக்கின்றனா். நிகழ்ச்சியில், சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் மற்றும் அமைச்சா்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.
புதிய பேருந்து நிலையம் சனிக்கிழமை (மே 3) முதல் செயல்படவுள்ளது. இதையடுத்து சனிக்கிழமை முதல் ஏஎப்டி மைதானத்தில் செயல்படும் தற்காலிகப் பேருந்து நிலையம் மூடப்படுகிறது.
அனைத்து வழித்தட பேருந்துகளும் சனிக்கிழமை முதல் புதிய பொலிவுறு நகா் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளன.
போராட்டம் அறிவிப்பு: முன்னதாக புதிய பேருந்து நிலையம் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி திறக்கப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திறப்பு விழா அன்றைய தினம் நடைபெறவில்லை.
இதையடுத்து அதிமுக, திமுக சாா்பில் புதிய பேருந்து நிலையத்தை திறக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.