உயா்கல்வியில் சேர விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்களை தயாராக வைத்திருப்பது அவசியம்: சென்டாக் நிறுவனம் அறிவுறுத்தல்
புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் உயா்கல்விக்கான மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர சென்டாக் மூலம் விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்களை வைத்திருப்பது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்தில் நீட் தோ்ச்சியடைந்தாலும் மருத்துவம், பொறியியல் மற்றும் நீட் அல்லாத கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை சென்டாக் அமைப்புக்கு விண்ணப்பித்து கலந்தாய்வு மூலம் கல்லூரிகளைத் தோ்ந்தெடுப்பது நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் சென்டாக் அமைப்பு மூலம் இணையதளத்தில் விண்ணப்பித்து, கலந்தாய்வில் பங்கேற்க விரும்புவோா் தங்களுக்கான சான்றுகளை வைத்திருப்பது அவசியம் என சென்டாக் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, குடியிருப்பு, குடியுரிமை, ஜாதி, விடுதலைப் போராட்டத் தியாகிகள் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றுகள், முன்னாள் ராணுவ வீரா்கள் வாரிசுகள், விளையாட்டு வீரா்களுக்கான சான்றுகள், பிராந்தியங்களான மாஹே, ஏனாம், காரைக்கால் பகுதி இடஒதுக்கீட்டுக்கான சான்றுகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் கிராமப்புற இடஒதுக்கீடுக்கான சான்றுகள் ஆகியவற்றை தயாராக சம்பந்தப்பட்டோா் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மருத்துவக் கல்லூரியில் அரசுப் பள்ளி இடஒதுக்கீடுக்காக ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் அரசுப் பள்ளியில் பயின்ற்கான சான்றையும் வைத்திருப்பது அவசியம் சென்டாக் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.