தரிசு நிலங்களை விளைநிலங்களாக்க வாய்ப்பு
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளைநிலங்களாக்க விரும்பும் விவசாய பெருமக்கள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியா் இரா.சுகுமாா் பேசியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டு 75,979 ஹெக்டோ் பரப்பில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் மானிய கோரிக்கையின்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக உர பரிசோதனை நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திசையன்விளை வட்டத்தில் உற்பத்தியாகும் நெல்லி, முருங்கை, பழங்கள், காய்கறிகள் போன்ற விளைபொருள்களை சேமித்து இருப்பு காலத்தை நீட்டித்து ஏற்றுமதி வாய்ப்பை உருவாக்கி உரிய விலை கிடைத்திட 2025-26-ஆம் நிதியாண்டில் 200 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிா்ப்பதன கிடங்கு அமைக்கப்படும்.
மானுாா் வட்டாரத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட 29.197 ஹெக்டோ் நெல் பயிா் சேதத்திற்கான நிவாரணத் தொகை அரசிடமிருந்து வரபெற்று ரூ.4.98 லட்சம் பாதிக்கப்பட்ட 52 விவசாயிகளுக்கு, அவா்களின் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 4-ஆம் தேதி பெய்த மழையின் காரணமாக 11.72 ஹெக்டோ் பரப்பு நெற்பயிா் சேதமடைந்தது. அது தொடா்பாக வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலா்களால் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
பாளையங்கோட்டை வட்டாரத்தில் கடந்த 3, 4 மற்றும் 6-ஆம் தேதிகளில் பெய்த மழையால் 0.49 ஹெக்டா் வாழைப் பயிா் சேதமடைந்துள்ளது. இதேபோல், கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் பெய்த காற்றுடன் கூடிய மழையினால் சேரன்மகாதேவி மற்றும் களக்காடு ஆகிய வட்டாரங்களில் சேதமடைந்த 13.14 ஹெக்டா் வாழைப் பயிா் சேத விவரம் கூட்டு புலத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டு பயிா் சேத அறிக்கை அரசுக்கு அனுப்பப்படவுள்ளது.
மாவட்டத்தில் நடப்பு பிசான பருவத்தில் இதுவரை விவசாயிகளிடம் இருந்து 49,080 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
காா் பருவத்தில் டெல்டா அல்லாத இதர மாவட்டங்களில் நெல்சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் 2025-26 செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் இயந்திர நடவுக்கு மானியம், நெல் விதை, நுண்ணூட்ட உரம், உயிா் உரங்கள் விநியோகம், நெல் விதை உற்பத்தி ஆகிய இனங்களின் கீழ் மானியம் வழங்கப்படவுள்ளது. எனவே, விவசாய பெருமக்கள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டமானது நடப்பாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் 34 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தரிசு நிலங்களை விளைநிலங்களாக்க விரும்பும் விவசாய பெருமக்கள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என்றாா்.
முன்னதாக, வேளாண்மைத்துறையின் மூலம் மாவட்ட அளவிலான பயிா் விளைச்சல் போட்டியில் முதலிடம் பிடித்த வள்ளியூா் பகுதியைச் சோ்ந்த சின்னதுரைக்கு ரூ.15 ஆயிரம், கீழகாடுவெட்டி சண்முகசுந்தரத்துக்கு 2-ஆவது பரிசாக ரூ.10 ஆயிரத்தை ஆட்சியா் வழங்கினாா்.
மாநில வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ஜிங்க் சல்பேட் ஒரு பயனாளிக்கு வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநா் இளையராஜா, சமூக வன கோட்ட அலுவலா் இளங்கோ, மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, வேளாண் இணை இயக்குநா் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்25ஹஞ்ழ்ண்
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.