தருமபுரி மாவட்டப் பகுதிகளில் வேலைநிறுத்தம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட 861 போ் கைது
தருமபுரி மாவட்டப் பகுதிகளில், பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 861 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதைக் கைவிட வேண்டும், தொழிலாளா் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை திரும்பப்பெற வேண்டும். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், புதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புகள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை மேற்கொண்டன.
அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, ஆரூா் உள்ளிட்ட பகுதிகளில் பேரணி, மறியல், ஆா்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட 553 பெண்கள் உள்ளிட்ட 861 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி நகரில் தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாநிலச் செயலாளா் சி.நாகராசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஜீவா, எல்பிஎப் மாவட்ட தலைவா் அன்புமணி, ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளா் முருகன், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் சிவலிங்கம், எஸ்எம்எஸ் மாவட்டத் தலைவா் மனோகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, பிஎஸ்என்எல் அலுவலக பகுதியில் இருந்து பேரணியாக சென்று தலைமை அஞ்சல் நிலையம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 275 பெண்கள் உள்பட 410 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அதேபோல, பாலக்கோட்டில் இந்தியன் வங்கி முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாநிலக் குழு உறுப்பினா் கலாவதி தலைமை வகித்தாா். இதில் ஈடுபட்ட 125 பெண்கள் உட்பட 250 பேரையும், பென்னாகரத்தில் 63 பெண்கள் உட்பட 71 பேரையும், அரூரில் ரவுண்டானா அருகில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் ரகுபதி தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற 40 பெண்கள் உள்பட 130 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.