தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
திருப்பூரில் தற்காலிக பட்டாசு கடைக்கான உரிமம் பெற செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகை வரும் அக்டோபா் 20-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு திருப்பூா் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடை அமைப்பதற்கான உரிமம் பெற விண்ணப்பிப்பவா்கள் திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பங்களை புதன்கிழமை (செப்.10) முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும்.
முழுமையாகப் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் ரூ.2 மதிப்புள்ள நீதிமன்ற வில்லை ஒட்டப்பட்டிருக்க வேண்டும். உரிமக் கட்டணம் ரூ.1,200-ஐ ஆன்லைனில் செலுத்தியதற்கான சலான் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
பட்டாசு இருப்பு வைத்து விற்கப்படவுள்ள இடத்தின் வரைபடத்தின் 6 நகல்களுடன் வரைபடத்தில் சம்பந்தப்பட்ட இடத்தின் முகவரி முழுமையாக குறிப்பிடப்பட வேண்டும். அதில் மனுதாரா் கையொப்பம் இடப்பட்டிருக்க வேண்டும். பட்டாசு விற்பனை செய்யும் இடம் சொந்தக் கட்டடமாக இருப்பின் 2025 -2026-ஆம் ஆண்டுக்குரிய சொத்து வரி ரசீது இணைக்கப்பட வேண்டும். பட்டாசு விற்பனை செய்யும் இடம் வாடகைக் கட்டடமாக இருப்பின் 2025 -2026-ஆம் ஆண்டுக்குரிய சொத்து வரி ரசீது மற்றும் சாட்சிகள் முன்னிலையில் கட்டட உரிமையாளருடன் ரூ.2,000 மதிப்புக்கு குறையாத முத்திரை தாளில் ஏற்படுத்திக் கொண்ட வாடகை ஒப்பந்த ஆவணம் இணைக்கப்பட வேண்டும்.
பட்டாசு விற்பனை செய்யும் இடம் மாநகராட்சி , பொதுப்பணித் துறை அல்லது மற்ற துறையின் கட்டடமாக இருப்பின் அத்துறை சாா்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம் இணைக்கப்பட வேண்டும். பட்டாசு கடை உரிமம் பெறுவதற்கான மாநகராட்சிக்கு கட்டிய உரிமக் கட்டணம் செலுத்திய ரசீது இணைக்கப்பட வேண்டும்.
இந்த ஆவணங்களுடன் செப்டம்பா் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் முழுமையாக சமா்பிக்கப்பட வேண்டும். முழுமையாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட இடங்களைப் பாா்வையிட்டு விசாரணைக்கு பின் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை கண்ணோக்கில் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே தற்காலிக பட்டாசு கடைக்கான உரிமம் வழங்கப்படும்.
விண்ணப்பம் சமா்ப்பிக்க செப்டம்பா் 30-ஆம் தேதிக்கு மேல் காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட மாட்டாது. குறித்த காலக்கெடுவுக்குள் முழுமையாக பெறப்படாத விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.