டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் என்ன? கௌதம் கம்பீர் ...
தள்ளாடும் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 109 புள்ளிகள் சரிவுடன் முடிவு!
மும்பை : பெஞ்ச்மார்க் குறியீடான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் ஆண்டின் இறுதி வர்த்தக நாளான இன்று (டிசம்பர் 31) கலவையான போக்கில் முடிந்தது.
உலகளாவிய சந்தைகளின் பலவீனமான போக்குகளுக்கு மத்தியில், அந்நிய முதலீடு தொடர்ந்து வெளியேறி வருவதால் நீடிக்கும் பதற்றமும் இணைந்து, இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து தொடங்கியது. முதலீட்டாளர்கள் ஐடி மற்றும் ரியால்டி பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்ததால் இது வாடிக்கையாளர்களின் உணர்வுகளை வெகுவாக பாதித்தது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 468.14 புள்ளிகள் சரிந்து 77,779.99 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 117.05 புள்ளிகள் சரிந்து 23,527.85 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 109.12 புள்ளிகள் சரிந்து 78,139.01 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 0.10 புள்ளிகள் சரிந்து 23,644.80 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.
இதையும் படிக்க: டொயோட்டா விற்பனை 44% அதிகரிப்பு
நிஃப்டி பேங்க் 191.50 புள்ளிகள் சரிந்து 50,761.25 புள்ளிகளாகவும், நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 244.95 புள்ளிகள் சரிந்த 56,944.80 ஆக வர்த்தகம் ஆனது. நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 21 புள்ளிகள் சரிந்த 18,618.95 ஆகவும் இருந்தது. துறை வாரியாக பார்க்கும்போது, பொதுத்துறை வங்கி, பார்மா, மெட்டல், எனர்ஜி, கமாடிட்டிகள், பிஎஸ்இ மற்றும் ஹெல்த்கேர் துறைகளில் வாடிக்கையாளர்கள் பங்குகளை வாங்கி உள்ளனர்.
இன்று 2,239 பங்குகள் ஏற்றத்திலும், 1571 பங்குகள் சரிந்தும், 97 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமானது.
டாப் 30 ப்ளூ சிப் பங்குகளில் இன்று டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், சோமேட்டோ, இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை சரிந்து முடிந்த நிலையில், கோடக் மஹிந்திரா வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இன்று ரூ.1,893.16 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
ஆசிய சந்தைகளில், சியோல் மற்றும் ஷாங்காய் சரிந்தும் ஹாங்காங் உயர்ந்து முடிந்தது. அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) சரிவுடன் முடிவடைந்தது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.30 சதவீதம் உயர்ந்து பீப்பாய்க்கு 74.39 டாலராக உள்ளது.