பாகிஸ்தானின் முக்கிய இடங்களைக் குறிவைக்கும் இந்தியா; ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்...
தாயகத்தை விட்டு வெளியேறினார் வங்கதேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர்!
வங்கதேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் ஹமீத் அவரது தாயகத்தை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற தேசியளவிலான மக்கள் போராட்டத்தின் மூலம் கவிழ்க்கப்பட்டது. அதன் பின்னர், அந்நாட்டிலிருந்து வெளியேறிய அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவரும், கடந்த 2013 முதல் 2023 வரை இரண்டு முறை அந்நாட்டின் குடியரசுத் தலைவராக பதவி வகித்த அப்துல் ஹமீத் தற்போது அந்நாட்டை விட்டு வெளியேறி தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் சென்றடைந்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டு முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டதும், அவாமி லீக் கட்சி மற்றும் ஹசீனாவின் அரசில் முக்கிய பதவி வகித்த பலர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது, அமைந்துள்ள இடைக்கால அரசு, கிஷோர்கஞ்ச் மக்கள் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் ஹமீத், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அவரது சகோதரி ஷேக் ரெஹெனா, ஹசீனாவின் மகன் சஜீப் வஸெத், மகள் சைமா வஸெத் மற்றும் அவர்களது கூட்டாளிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், அப்துல் ஹமீத் மீதான வழக்கு குறித்து தங்களுக்கு தெரியும் என்றும் அவர் மீது அந்நாட்டு நீதிமன்றம் அல்லது ஊழல் தடுப்பு ஆணையம் ஆகியவை எந்தவொரு பயணத் தடையும் விதிக்காததினால் அவர் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க:லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!