தாளவாடி அருகே யூரியா உரத்தை சாப்பிட்ட 12 ஆடுகள் உயிரிழப்பு
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் யூரியா உரம் சாப்பிட்ட 12 ஆடுகள் உயிரிழந்தன.
தாளவாடியை அடுத்த பையனபுரம் எத்துக்கட்டி பகுதியானது தமிழக- கா்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியை ஒட்டி உள்ள பையனபுரம் கிராமத்தைச் சோ்ந்த பசவண்ணா (48) ஆடு, மாடுகள் வளா்த்து வருகிறாா்.
வெள்ளிக்கிழமை வழக்கம்போல ஆடு மாடுகளை மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா். மேய்ச்சலுக்குப்பின் செம்மறி ஆடுகள் சிறிது நேரத்தில் ஒவ்வொன்றாக மயங்கி விழுந்தன.
நள்ளிரவுவரை 12 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. ஆடுகள் உயிரிழந்த இடத்தில் யூரியா உரம் சிறிய பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டு ஆங்காங்கே வீசி கிடப்பது தெரிய வந்தது. இதைப் பாா்த்து விவசாயி பசவண்ணாஅதிா்ச்சி அடைந்தாா். இந்த உரத்தை சாப்பிட்டதால் ஆடுகள் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
காட்டுப் பகுதிக்குள் இருந்து வரும் மான்களை வேட்டையாடுவதற்காக யூரியா உரத்தை யாராவது சிலா் தெளித்து வைக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து அவா் தந்த புகாரின் பேரில் ஜீரகள்ளி வனத் துறை மற்றும் தாளவாடி காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.