திடீரென வெடித்து சிதறிய பட்டாசு - துண்டு துண்டான பொள்ளாச்சி விவசாயியின் கை விரல்கள்... என்ன நடந்தது?
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள பானும்பலம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முத்துக்குமார். இவர் நேற்று தன் வீட்டில் இருந்தபோது பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் அவரது வலது கையில் உள்ள ஐந்து விரல்களும் துண்டாகின.
மேலும் தொடை, மார்பு பகுதியிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
முத்துக்குமார் தோட்டத்துக்கு யானை வந்ததாகவும் அந்த யானையை விரட்டுவதற்காக அவர் பட்டாசு வீசியதாகவும்... அப்போது திடீரென பட்டாசு வெடித்து விபத்து நிகழ்ந்ததாகவும் முதலில் தகவல் வெளியானது.

இதனால் அதிர்ச்சி ஏற்பட்டது. இது குறித்து பொள்ளாச்சி வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர். அதில் முத்துக்குமார் யானையை விரட்டுவதற்காக பட்டாசு வீசவில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “முத்துக்குமார் கேரளாவில் இருந்து வெடி பொருள் வாங்கி தன் பண்ணையில் வைத்திருந்தார். வன எல்லையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் அவரின் பண்ணை உள்ளது. இரவில் அவர் தோட்டத்தில் தீ வைத்திருக்கிறார்.

அந்த நேரத்தில் தீப்பொறி தற்செயலாக பட்டாசு வைக்கப்பட்டிருந்த பையில் பட்டு முழு பட்டாசுகளும் வெடித்தன. அவர் எந்த யானையையும் விரட்டவில்லை. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.” என்றனர்.