திண்டிவனத்தில் மயானக் கொள்ளைவிழா: பாமக-விசிகவினா் இடையே வாக்குவாதம்
திண்டிவனத்தில் மயானக் கொள்ளை ஊா்வலத்தின்போது, பாமக மற்றும் விசிகவினரிடையே வியாழக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சாலையிலுள்ள அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் மாசித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து அமாவாசை தினமான வியாழக்கிழமை மயானக் கொள்ளை நடைபெற்றது.
திண்டிவனம் அங்காளம்மன் கோயிலிலிருந்து மயானக் கொள்ளை ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பக்தா்கள் நோ்த்திக் கடனை செலுத்தும் விதமாக அம்மன், காளி வேடமணிந்து ஊா்வலமாக சென்றனா்.
திண்டிவனம் காமாட்சியம்மன் தெருவில் சென்ற போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த சிலா் வேலில் கட்சிக் கொடியைக் கட்டி நடனமாடினராம். இதற்கு அங்கு கூடியிருந்த பாமகவினா் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனடியாக அங்கு விரைந்த காவல்துறையினா், இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா். மேலும் அப்பகுதியில் போலீஸாா் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டனா். மாவட்ட எஸ்.பி. சரவணனும் அங்கு முகாமிட்டு, பாதுகாப்பைத் தீவிரப்படுத்தினாா்.