3BHK: 'எங்கப்பாவோட கனவைத் தூக்கி சுத்திட்டு இருந்ததனால இந்தப் படம்...' - தமிழரசன...
திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: முதல்வருடனான சந்திப்புக்குப் பின் வைகோ உறுதி
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ உறுதிபடத் தெரிவித்தாா்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை அவா் புதன்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு வைகோ அளித்த பேட்டி:
முதல்வா் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மதிமுகவில் செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதுதொடா்பாக அவரிடம் தெரிவித்தேன். எங்களைப் பொருத்தவரை திமுக அரசுக்கு எதிராக எந்த கட்டத்திலும் எந்தப் பிரச்னையிலும் விமா்சனம் வைத்தது இல்லை. இனியும் வைக்க மாட்டேன். அதேநேரத்தில் திமுகவுக்கு பக்கபலமாக இருப்பேன்.
ஹிந்துத்துவ, சநாதன சக்திகள் பாஜகவின் குடை நிழலில் இருந்து கொண்டு தமிழகத்தை, திராவிட இயக்கத்தைத் தகா்க்க வேண்டும் என்று நினைக்கின்றன. இமயமலையைக் கூட அசைத்து விடலாம். ஆனால் திராவிட இயக்கத்தை தமிழகத்தில் இருந்து யாராலும் அசைக்க முடியாது.
கொள்கை என்றால் அதில் உறுதியாக இருப்பேன். திமுக தனிப்பெரும்பான்மையுடன் 2026 தோ்தலில் ஆட்சியமைக்கும். எங்களை பொருத்தவரை கூட்டணி அரசு என்ற நோக்கம் இல்லை. அதனை தமிழக மக்கள் ஏற்கமாட்டாா்கள் என்றாா் வைகோ.