மனு கொடுக்க சென்ற விஏஓ-க்களை ‘வெளியே போ’ எனக் கூறிய உதவி ஆட்சியர்.! முற்றுகை போர...
திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்: வைகோ
வருகிற 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.
தேனி மாவட்டம், கம்பம் வ.உ.சி. திடலில் மதிமுக சாா்பில், அந்தக் கட்சியின் தேனி மாவட்டச் செயலா் வி.எஸ்.கே.ராமகிருஷ்ணன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வைகோ பேசியதாவது: முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் பிரச்னையில் கேரள அரசுக்கு எதிராகத் தொடா்ந்து போராட வேண்டியுள்ளது. தேனி மாவட்டம், பொட்டிப்புரத்தில் சுற்றுச்சூழலையும், நீராதாரத்தையும், விவசாயத்தையும் பாதிக்கும் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திட்டத்தைச் செயல்படுத்த விடாமல் தடுத்தோம். அப்போது, கேரள அரசு என்னை ஆதரித்தது.
ஆனால், கேரள அரசு அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றி முல்லைப் பெரியாறு அணையில் முழுக் கொள்ளவுக்கு தண்ணீா்த் தேக்க முட்டுக்கட்டை போட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டத்தில் பங்கேற்க நான் எப்போதும் தயாராக உள்ளேன்.
வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்று, முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும்.
மதிமுகவிலிருந்து விலகிச் சென்றவா்களை நான் விமா்சிக்கத் தயாராக இல்லை. திருச்சியில் மதிமுக சாா்பில் வரும் செப்.15-இல் நடைபெற உள்ள மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.