`திமுக-வை ஒழிக்க நினைக்கும் சக்திகளுக்கு பலியாகும் அளவிற்கு நான் பலவீனமானவன் இல்லை' - திருமாவளவன்
கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண விழாவில் வி.சி.க தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது, ``முதல்வர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக இருக்கிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி. தற்போது என்னை சுற்றி ஏராளமான விவாதங்கள் நடைபெறுகிறது. நம் மீது வைத்துள்ள மரியாதைக்காக இல்லை. நம்மை எப்படியாவது காலி செய்து விட வேண்டும் என்ற சக்திகளின் சதி அது. நம்மைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள் என்று மகிழ்ச்சி அடையவதற்கு இல்லை. அதில் சூது, சூழ்ச்சி இருக்கிறது. சதி பின்னப்பட்டு வருகிறது. அவர்களின் உண்மையான குறி தி.மு.க., தான். திருமாவளவன் இல்லை.
தி.மு.கவை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று எண்ணும் சக்திகள் திருமாவை ஒரு துாதாகப் பயன்படுத்தி அதை நிறைவேற்றி விட வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கு பலியாகும் அளவிற்கு திருமாவளவன் பலவீனமானவன் இல்லை. ஏதோ அழுத்தம் அச்சுறுத்தல் என்கிறார்கள். என்னுடன் நெருங்கி பழகியவர்களுக்கு தெரியும். ஏன் இதை திரும்பத் திரும்ப நான் சொல்கிறேன் என்றால்... எனது நம்பகத்தன்மை மீதே கை வைக்கிறார்கள். திருமாவளவன் இங்கு பேசிக்கொண்டு, அங்கு ஏதோ வேலை செய்கிறார் என்கிறார்கள். அந்த அரசியல் எனக்கு தெரியாது. அந்த அரசியல் தேவையில்லை.
அப்படி ஒரு தாக்குதல் என் மீது நடத்தப்படுகிறது, திமுக-வுடன் பேசிக்கொண்டு மறைமுகமாக பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறதோ என்ற ஒரு சந்தேகத்தை என் மீது எழுப்புகிறார்கள். என்னை நம்பக்கூடிய என் தோழர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்போதும் சனாதனத்திற்கு எதிராக இருக்கும். எந்த சூழ்நிலையிலும் எங்கள் நலன் பெரிது என்று சனாதனம் உள்ள அணிக்கு ஒரு போதும் இடம் கொடுக்கமாட்டோம். அதனால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும் எவ்வளவு பெரிய பேரிழப்பு ஏற்பட்டாலும், அதைத் தாங்கிக் கொள்கின்ற வலிமை விசிக-விற்கு உண்டு" என்றார்.