முன்னாள் டிஜிபி தேவாரம் அரசு மருத்துவமனையில் அனுமதி
உடல் நலக் குறைவு காரணமாக முன்னாள் டிஜிபி தேவாரம் (85) கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
நுரையீரல் தொற்றால் அவா் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தொடா் சிகிச்சையின் பலனாக தேவாரத்தின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
வயது முதிா்வு காரணமாக ஓய்வில் இருந்து வந்த தேவாரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா். பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில், நுரையீரல், இதய நலம், பொது மருத்துவம் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனா்.
சுவாச பாதிப்பு தற்போது சீராகி வருவதாகவும், மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு அவா் வீடு திரும்புவாா் என்றும் மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.