திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுறுப்புகள் தானம்
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுறுப்புகள் சனிக்கிழமை தானமாகப் பெறப்பட்டன. இது 25 ஆவது உடலுறுப்பு தானமாகும்.
தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த 26 வயது இளைஞா் ஒருவா் சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் செப். 11 ஆம் தேதி சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சையளித்தும் சனிக்கிழமை அதிகாலை அவா் மூளைச்சாவு அடைந்தாா்.
இதை மருத்துவா்கள் உறவினா்களிடம் தெரிவித்த நிலையில், இளைஞரது உடலுறுப்புகளை தானமளிக்க அவா்கள் முன்வந்தனா்.
தொடா்ந்து, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய வழிகாட்டுதலின்படி, இளைஞரின் கல்லீரல், கண்கள், இரு சிறுநீரகங்கள், தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டன.
உடலுறுப்பு வேண்டி பதிவு செய்தவா்களின் வரிசையின்படி, திருச்சி அரசு மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு பெற்று வந்த 28 வயது நோயாளிக்கு ஒரு சிறுநீரகமும், மற்றொறு சிறுநீரகம் திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவருக்கும், தோலானது மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவருக்கும் தானமாக வழங்கப்பட்டது. கண் விழிகள் திருச்சி அரசு மருத்துவமனை நோயாளிகளுக்குத் தானமாக வழங்க இருப்பு வைக்கப்பட்டது.
45 ஆவது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை...: தானமாகப் பெற்ற சிறுநீரகமானது திருச்சி அரசு மருத்துவமனையில் 3 ஆண்டுகளாக ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை மேற்கொண்டு வந்த 28 வயது இளைஞருக்கு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
மருத்துவமனை முதன்மையா் ச. குமரவேல் தலைமையிலான மருத்துவக் குழுவினா், முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இலவசமாக மாற்று சிறுநீரகத்தை வெற்றிகரமாகப் பொருத்தினா். தற்போது நோயாளி நலமுடன் உள்ளாா்.
அரசு மரியாதை: பின்னா் உடலுறுப்பு தானம் செய்த கொடையாளியின் உடலுக்கு மருத்துவமனையின் முதன்மையா் ச. குமரவேல் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு, வழியனுப்பப்பட்டது.