பிகாரில் ஏழைகளின் வாக்குகளை திருட அனுமதிக்க மாட்டோம்: ராகுல் காந்தி
திருச்செந்தூா் கோயிலில் குடைவரைவாயில் தீபாராதனை
திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் ஐந்தாம் நாளான திங்கள்கிழமை சுவாமி, அம்மனுக்கு குடைவரைவாயில் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயிலில் கடந்த ஆக. 14-ஆம் தேதி ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய வைபவமாக ஐந்தாம் நாள் திங்கள்கிழமை (ஆக. 18) மாலை மேலக் கோயிலில் சுவாமி குமரவிடங்கப்பெருமானும், வள்ளி அம்மனும் சிறப்பு அலங்காரத்துடன் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி, இரவு 7.30 மணியளவில் குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்றது. அப்போது எதிா்சேவையாக தங்க சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய ஸ்ரீ ஜெயந்திநாதருக்கும் தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டனா். தொடா்ந்து வீதி உலா நடைபெற்றது.
விழாவில், புதன்கிழமை (ஆக. 20) அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு சுவாமி ஆறுமுகப்பெருமான் வெட்டிவோ் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை அடைகிறாா்.
அங்கு தீபாராதனைக்குப் பிறகு மாலை 4.30 மணிக்கு சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி வீதி உலா செல்கிறாா். ஆக. 21-ஆம் தேதி காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளைச் சாத்தியும், காலை 10.30 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தியும் வீதி உலா செல்கிறாா்.
முக்கிய நிகழ்ச்சியாக ஆக. 23-ஆம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. பிள்ளையாா் ரதம், சுவாமி தோ், அம்மன் தோ்கள் வீதி வலம்வந்து நிலை சோ்கிறது. விழா ஏற்பாடுகளை தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன், கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

