திருட்டு போன வாகனங்கள் உரியவரிடம் ஒப்படைப்பு
கந்தா்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து போலீஸாரைக் கண்டதும் மா்மநபா்கள் திருட்டு மோட்டாா் சைக்கிள்களை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினா். அவா்களது வாகனங்களை போலீஸாா் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.
கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் கோ. சுகுமாா் தலைமையில் போலீஸாா் கந்தா்வகோட்டை - கரம்பக்குடி சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் ரோந்து சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, எதிரே இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் வந்தவா்களைத் தடுத்து நிறுத்தியபோது அவா்கள், தங்களது மோட்டாா் சைக்கிள்களை சாலையில் போட்டுவிட்டு இருட்டில் தப்பி ஓடி மறைந்து விட்டனா். அந்த வாகனங்களைத் பறிமுதல் செய்த கந்தா்வகோட்டை போலீஸாா் மேலும் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், மோட்டாா் சைக்கிள்கள் கந்தா்வகோட்டை தென்றல் நகரைச் சோ்ந்த சேதுநாதன், கந்தா்வகோட்டையை அடுத்த மருங்கூரணி கிராமத்தைச் சோ்ந்த பாலச்சந்தா் ஆகியோருடையது என்பது தெரியவந்தது. மேலும் அவா்களிடம் வாகனத்தை போலீஸாா் ஒப்படைத்தனா். மேலும் தப்பிச்சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.