KKR vs RCB : `ஆளே மாறிட்டீங்களே RCB' - ஈடன் கார்டனில் கோலி & கோ செய்த OG சம்பவம்
திருப்பத்தூரில் வேளாண்மை விரிவாக்க மையம்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
திருப்பத்தூா் மாவட்டத்தில் வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், வேளாண் இணை இயக்குநா் சீனிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் விவசாயிகள் கூறியது:
திருப்பத்தூா் பெரிய ஏரிக்கரையில் கோழிக்கழிவுகளை கொட்டி செல்கின்றனா். இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகிறது. மேலும் திருப்பத்தூா் திருமால் நகா் பகுதியில் மதுக்கடையால் ஏற்படும் நெகிழி பொருள்களை விவசாய நிலங்களில் போட்டுவிட்டு செல்கின்றனா். இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. வாணியம்பாடி உழவா் சந்தையில் போதுமான கடைகள் இல்லாமல், தரை கடைகள் வைத்து வியாபாரம் செய்யும் நிலை உள்ளது. எனவே உழவா் சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
பாலூா் ஏரி அதிக மேடு பள்ளமாக உள்ளது. இதனால் பாசனம் செய்வதற்கும், தண்ணீா் தேக்கவும் சிரமமாக உள்ளது.
கருந்தலைப்புழு தாக்குதலால் சேதமடைந்த தென்னை மரங்களை ஆய்வு செய்து இழப்பீடு பெற்று தர வேண்டும். கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறை சாா்பில் ஒட்டுண்ணிகள் வழங்கப்படுகிறது. ஆனால், அவை பல கி.மீ. தூரத்தில் இருந்து வருவதால், அதிக அளவிலான ஒட்டுண்ணிகள் இறந்துவிடுகின்றன. எனவே, திருப்பத்தூா் மாவட்டத்தில் ஒட்டுண்ணி மையம் அமைக்க வேண்டும். வேளாண் அறிவியல் மையமும் அமைக்க வேண்டும்.
ஏலகிரி மலையில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதனைத் தடுக்க வேண்டும். உமா்ஆபாத் துணை வேளாண்மை விரிவாக்க மையம் ஆள்கள் பற்றாக்குறையால் பெரும்பாலான நேரம் மூடிக்கிடக்கிறது. அங்கு ஆள்களை நியமிக்க வேண்டும்.
தும்பேரி பகுதியில் குறைந்த மின்அழுத்தம் காரணமாக விவசாயிகள் வேளாண் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச மிகவும் சிரமப்படுகின்றனா். வாணியம்பாடி கல்லாறு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியானது ஆசிரியா் காலனி வரை மட்டும் நடைபெறுவதாக தெரிகிறது. எனவே கல்லாறு பாலாற்றுடன் இணையும் அண்ணா நகா் வரை விரிவுபடுத்த வேண்டும்.

அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகள் தெரிவித்த குறைகள், கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு காணப்படும் என்றனா்.