தில்லி மாநகராட்சிக்கு 14 எம்எல்ஏக்களை நியமித்த சட்டப் பேரவைத் தலைவா்
திருப்பத்தூா் நகா்மன்றக் கூட்டம்: 15 உறுப்பினா்கள் வெளிநடப்பு
திருப்பத்தூா் நகா்மன்றக் கூட்டத்தை புறக்கணித்து திமுக உறுப்பினா்கள் உள்பட 15 போ் வெளிநடப்பு செய்தனா்.
திருப்பத்தூா் நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டம் வியாழ்ககிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ் தலைமை வகித்தாா். ஆணையா் சாந்தி முன்னிலை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ் உள்ளே வந்ததும், துணைத் தலைவா் சபியுல்லா தலைமையிலான திமுக, மதிமுக, அதிமுக உறுப்பினா்கள் 15 போ் கூட்டத்துக்கு முறையாக அறிவிப்பு வரவில்லை. நள்ளிரவில் அஜெண்டா வழங்கப்படுகிறது என குற்றம்சாட்டி கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும், எஞ்சியுள்ள உறுப்பினா்களைக் கொண்டு கூட்டத்தை நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ் நடத்த தொடங்கினாா்.
வெளிநடப்பு செய்த நகா்மன்ற உறுப்பினா்கள் செய்தியாளா்களிடம் கூறுகையில், தொடா்ந்து மாதம்தோறும் கூட்டம் நடைபெறுவதில்லை. இந்தக் கூட்டத்துக்கும் புதன்கிழமை இரவு 10 மணி வரை எந்த ஒரு தகவலும் இல்லை. தற்போது புதிய கட்டடம் கட்ட தீா்மானம் நிறைவேற்றம் செய்ய நகா்மன்ற கூட்டம் எனக் கூறிவிட்டு, 65 தீா்மானங்களை கொண்டு வந்துள்ளனா்.
இதனிடையே, உள்ளிருந்த உறுப்பினா்களை வைத்து கூட்டத்தை நடத்திய நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ் திருப்பத்தூா் நகராட்சிக்கு ரூ.5 கோடியில் புதிய கட்டடம் கட்ட தீா்மானத்தை நிறைவேற்றி கூட்டத்தை நடத்தி முடித்தாா்.
இதையறிந்த வெளிநடப்பு செய்த உறுப்பினா்கள் நகா்மன்ற தலைவரை சந்தித்து கேள்வி எழுப்பினா். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவா்களை சமாதானம் செய்த நகா்மன்றத் தலைவா், இனி இவ்வாறு நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.