உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
திருப்பனந்தாளில் நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் மறியல்!
தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாளில் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யாததால் அதிகாரிகளை கண்டித்து சனிக்கிழமை விவசாயிகள் திருப்பனந்தாள்-ஆடுதுறை சாலையில் மறியல் செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், டெல்டா பகுதிகளில் முன் பட்ட குருவை சாகுபடி பணிகள் நிறைவடைந்து நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. திருவிடைமருதூா் சுற்றுவட்டாரத்தில் 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
திருப்பனந்தாளில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான நெல்மூட்டைகள் இயக்கம் இன்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்து வரும் விவசாயிகளிடம் நெல்லை, கொள்முதல் செய்ய முடியாமல் நிலையங்கள் திணறி வருகின்றனா்.
இந்த நிலையில் திருப்பனந்தாள்- ஆடுதுறை சாலையை முற்றுகையிட்டு விவசாயிகள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். நெல்லை கொள்முதல் செய்யவும், ஏற்கெனவே கொள்முதல் செய்த நெல் மூட்கைளை இயக்கம் செய்யக்கோரி அதிகாரிகளை கண்டித்து முழக்கமிட்டனா்.
சாலைமறியல் செய்த விவசாயிகளிடம் திருப்பனந்தாள் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனா். சாலை மறியலால் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.