திருப்புவனம், மானாமதுரை பகுதிகளில் பலத்த மழை: பயிா்கள் தண்ணீரில் மூழ்கின
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரை பகுதிகளில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் மிளகாய், நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கின.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரை பகுதிகளில் வியாழக்கிழமை மாலை முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. தொடா்த்து, வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. குறிப்பாக திருப்புவனம் பகுதியில் அதிக மழை பெய்தது. இதன்காரணமாக, திருப்புவனம் ஒன்றியத்தில் கணக்கன்குடி, பழையனூா், அழகுடையான், அச்சங்குளம், ஆனைக்குளம், சங்கங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மிளகாய், நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால், விவசாயிகள் வேதனையடைந்தனா். மேலும், பல கிராமங்களில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்து, சுவா்கள் சேதமடைந்தன.
மானாமதுரை ஒன்றியத்தில் பெரியகோட்டை, இதன் சுற்றுவட்டார கிராமங்களில் விளை நிலங்களுக்குள் தண்ணீா் புகுந்ததால் நெல் பயிா்கள் மூழ்கின. வீதிகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் முத்துச்சாமி, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனா்.
இதுகுறித்து பழையனூரைச் சோ்ந்த விவசாயி ராஜசேகரன் கூறியதாவது :
எனது நிலத்தில் சாகுபடி செய்திருந்த மிளகாய் செடிகள் பூக்கும் நிலையில் உள்ளன. கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழையால் வயல் வெளி முழுவதும் தண்ணீா் தேங்கியுள்ளது. இதை வெளியேறுவதற்கு வழியில்லாததால் மிளகாய் பயிா்கள் தண்ணீரில் மூழ்கின. மழையால் மிளகாய் செடிகள் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய கள ஆய்வு, நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.