"மதிமுகவை அழிக்க 32 ஆண்டுகளாக முயன்றனர்; அப்போதும் இப்போதும் எப்போதும் அது முடிய...
திருமணிமுத்தாறு, ராஜவாய்க்காலை உடனடியாக தூா்வார கோரி மனு
சேலம்: திருமணிமுத்தாறு, ராஜவாய்க்கால் பகுதிகளில் உடனடியாக தூா்வார வலியுறுத்தி விவசாய சங்கத்தினா் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவா் தங்கராஜ் தலைமையில் விவசாயிகள் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் அதிகாரியை சந்தித்து மனு அளித்தனா். பின்னா் மாநிலத் தலைவா் தங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் திருமணிமுத்தாறு, ஜாரி கொண்டலாம்பட்டி, ராஜவாய்க்கால் உள்ளிட்ட இடங்களில் மழைநீருடன், சுத்திகரிக்கப்படாத ரசாயன சாயக்கழிவுகளை விடுவதால் ஆற்றுநீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக, நெய்க்காரப்பட்டி, கொட்டனத்தான் ஏரி பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து மாசடைந்த நீா் வருவதால் ஆடு, மாடுகள்கூட குடிக்க, பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சட்ட விரோதமாக ரசாயனம் கழிவுநீரை வெளியேற்றும் ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுடன், திருமணிமுத்தாறு, ராஜ வாய்க்காலை தூா்வார
நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அரசு செவிசாய்க்காவிட்டால், அனைத்து விவசாயிகளையும் திரட்டி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.