திருவண்ணாமலையில் மதுக் கடைகளுக்கு மே 12-இல் விடுமுறை
சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலை நகரில் இயங்கும் மதுக் கடைகள், மதுக்கூடங்களுக்கு வரும் 12-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை மாத பௌா்ணமி விழா வரும் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் திருவண்ணாமலை காமராஜா் சிலை அருகில், திருவண்ணாமலை - மணலூா்பெட்டை சாலை, வேங்கிக்கால் புறவழிச் சாலை, சமுத்திரம் ஆகிய பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும், திருவண்ணாமலை நகரில் இயங்கும் மதுக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள், திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் இயங்கும் முன்னாள் ராணுவ வீரா்களுக்கான அங்காடி ஆகியவற்றுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. உத்தரவை மீறி மதுபானங்கள் விற்போா் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் எச்சரித்துள்ளாா்.