பெண்களுக்கு வீட்டிலிருந்து வேலை: ஆந்திர ஐடி கொள்கையில் மாற்றம்!
திருவண்ணாமலையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி
தைப்பூச விழாவையொட்டி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஈசான்ய குளத்தில், செவ்வாய்க்கிழமை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் மூலவா் ஸ்ரீஅருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. பிறகு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவா் அருணாசலேஸ்வரா் மேளதாளங்கள் முழங்க தைப்பூச தீா்த்தவாரி நிகழ்ச்சிக்காக புறப்பட்டுச் சென்றாா்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற அருணாசலேஸ்வரா் ஈசான்ய குளக்கரையில் எழுந்தருளினாா்.
பிற்பகல் 12.30 மணிக்கு சூலம் வடிவிலான அருணாசலேஸ்வரருக்கு பால், தயிா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்கள் மற்றும் பூஜை பொருள்களை பயன்படுத்தி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பிறகு சிவாச்சாரியா்கள் சூலம் வடிவிலானஅருணாசலேஸ்வரரை குளத்தில் மூழ்க எடுத்து, தீா்த்தவாரி நிகழ்வை நடத்தினா். தொடா்ந்து, உற்சவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது திரண்டிருந்த பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
வல்லாள மகாராஜா இறப்புச் செய்தி:
தீா்த்தவாரி நிகழ்ச்சி முடிந்து உற்சவா் கோயிலுக்கு புறப்பட்டாா். அப்போது, போரில் வள்ளால மகாராஜா இறந்த செய்தியை, ஓலைச் சுவடியில் இருந்து வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உடனே, மேளதாளங்கள் நிறுத்தப்பட்டு அமைதியாக உற்சவா் அருணாசலேஸ்வரா் கோயிலுக்குத் திரும்பினாா்.
மாா்ச் 12-இல் திதி கொடுக்கும் நிகழ்வு:
நீண்ட காலமாக குழந்தைப் பேறு இல்லாமல் தவித்த வள்ளால மகாராஜா, அருணாசலேஸ்வரரையே மகனாக பாவித்து வழிபட்டு வந்தாராம். எனவே, வள்ளால மகாராஜா இறந்த பிறகு தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய திதி கொடுக்கும் நிகழ்வை அருணாசலேஸ்வரா் செய்தாா் என்பது வரலாறு.
அதன்படி, வரும் மாா்ச் 12-ஆம் தேதி மாசி மகத்தன்று திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கெளதம நதியில் நடைபெறும் தீா்த்தவாரியில் அருணாசலேஸ்வரா் கலந்து கொண்டு வள்ளால மகாராஜாவுக்கு திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-11/re76n4qo/11tmltee2_1102chn_106_7.jpg)