திருவள்ளூர் சிறுமி பாலியல் வழக்கு: திணறும் காவல்துறை; ரூ.5 லட்சம் சன்மானம் - என்ன நடக்கிறது?
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமி, அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 12-ம் தேதி பள்ளி முடிந்து, நண்பகல் நேரத்தில் வீட்டிற்குத் திரும்ப, ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தைக் கடந்து மாந்தோப்பு வழியாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது, அவரைப் பின்தொடர்ந்த மர்ம நபர் ஒருவர், திடீரென சிறுமியை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று, மாந்தோப்பில் ஆள் இல்லாத இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து அந்த மர்ம நபர் இந்தியில் செல்போனில் பேசி, மற்றொரு நபரை அழைத்துள்ளார். இதைச் சுதாரித்துக் கொண்ட சிறுமி, அவரின் முகத்தில் மண்ணை வாரித் தூவிவிட்டுத் தப்பி, வீட்டுக்கு வந்திருக்கிறார்.
சிறுமியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோரிடம், தனக்கு நேர்ந்த கொடூரத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
வேறு வழியின்றி சிறுமியை கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் உள்ள அரசு மருத்துவமனைக்குப் பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்குச் சிறுமிக்குச் சிகிச்சையளிக்காமல் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதனிடையே, சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
டி.எஸ்.பி சிறுமியிடம் தனியாக விசாரணை மேற்கொண்டு, வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து குற்றம்சாட்டப்பட்டவரை காவல்துறை தேடி வருகிறது. இதற்கிடையில், குற்றம்சாட்டப்பட்டவர் பற்றிய தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என டி.ஜி.பி சங்கர் ஜிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அவரது அறிவிப்பில், ``திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் கடந்த 12-ம் தேதி 10 வயது சிறுமி, அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
இது தொடர்பாக ஆரம்பாக்கம் காவல் நிலைய போலீஸார் போக்சோ உள்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து தனிப்படை போலீஸார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
போலீஸாரின் விசாரணையின் போது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இருப்பினும், சந்தேக நபரின் பெயர் மற்றும் முகவரி தெரியவில்லை. இது தொடர்பாக காவல்துறை தரப்பில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு உதவியாக சந்தேக நபரை அடையாளம் காணவும், வழக்கை துப்பு துலக்கவும் பயனுள்ள குறிப்பிடத்தக்க மற்றும் நம்பகமான தகவலை வழங்குபவருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். மேலும், தகவல் அளிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும்.
சந்தேக நபர் தொடர்பான ஏதேனும் தகவல் அல்லது விவரம் தெரிந்தவர்கள் இதற்கென ஒதுக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்ட காவல் செல்போன் எண் 99520 60948 என்ற எண்ணில் நேரடி அழைப்பு, குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.