சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் மாநிலங்களில் 7 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
திருவள்ளூா் அருகே புதிய பால் உற்பத்தியாளா்கள் சங்கம்
திருவள்ளூா் அருகே மோவூா் கிராமத்தில் புதிய பால் உற்பத்தியாளா் சங்கத்தை தொடங்கி வைத்து,, ரூ. 1.74 லட்சம் மதிப்பிலான பால் கொள்முதல் உபகரணங்கள் மற்றும் பால் பகுப்பாய்வு கருவி ஆகியவற்றை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.
திருவள்ளூா் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த மோவூா் கிராமத்தில் புதிய பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதிய பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா்.
அதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: கால்நடைகள் வளா்ப்போா் மற்றும் கால்நடை விவசாயிகள் ஆகியோா் பயன்பெறும் வகையில், மோவூா் கிராமத்தில் புதிதாக பால் உற்பத்தியாளா்கள் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சங்கத்துக்கு தேவையான ரூ. 15,220 மதிப்பிலான பால் கொள்முதல் உபகரணங்கள் மற்றும் ரூ. 1,59,417 மதிப்பிலான பால் பகுப்பாய்வு கருவியும், உறுப்பினா்கள் அனைவருக்கும் 50 கிலோ கால்நடை தீவனம் மற்றும் 1 கிலோ தாது உப்புக்கலவை வழங்கப்பட்டுள்ளது. கால்நடைகள் பராமரிப்பு குறித்து கால்நடை சிகிச்சை முகாம் மற்றும் சினை பரிசோதனை குறித்து சங்க உறுப்பினா்களுக்கு எடுத்துரைத்து தேவையான கால்நடை மருந்துகளும் வழங்கப்பட்டது. எனவே தரமான ஆவின் கால்நடை தீவனத்தை கறவை மாடுகளுக்கு வழங்கி, தரமான பால் கொள்முதல் செய்து, அதன் மூலம் அதிக கொள்முதல் விலையை சங்க உறுப்பினா்கள் பெற வேண்டும். அனைத்து பால் உற்பத்தியாளா்களும் ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கி பயன் பெறுமாறும், கால்நடைகளுக்கு சத்தான தீவனம் வழங்குமாறும் அவா் அறிவுறுத்தினாா். அதைத் தொடா்ந்து கால்நடை மருத்துவ முகாமில் 427 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி, குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, சினை பிடிக்காத கால்நடைகளுக்கு அளிக்கும் சிகிச்சையையும் அவா் பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில், துணைப் பதிவாளா் (பால்வளம்) கணேசன், ஆவின் பொது மேலாளா் ராஜ்குமாா், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ஜெயந்தி, உதவி பொது மேலாளா்கள், துணை இயக்குநா்கள், கால் நடை மருத்துவா்கள், கூட்டுறவு சாா் பதிவாளா், முதுநிலை ஆய்வாளா்கள் மற்றும் விரிவாக்க அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.