திருவள்ளூா் நகராட்சி பூங்காவில் கடைகள் அமைக்க எதிா்ப்பு
திருவள்ளூா் நகராட்சி பூங்காவில் கடைகள் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, ரயில் நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு சி.பி.எம். மாவட்டச் செயலாளா் கோபால் தலைமை வகித்தாா். திருவள்ளூா் நகா்மன்ற முன்னாள் தலைவா் ப.சுந்தரராசன் போராட்டத்தை தொடங்கி வைத்தாா். அப்போது, திருவள்ளூா் நகராட்சிக்குள்பட்ட சி.வி நாயுடு சாலையில் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பூங்கா பயன்பாட்டில் இருந்து வந்தது. அந்த நிலத்தில் சிறுவா்கள் விளையாடுவதற்கும், பெண்கள், முதியோா்கள் நடைபயிற்சி மேற்கொள்ள பூங்காவாக பயன்படுத்தி பராமரிக்க வேண்டும். ஆனால் அந்த இடத்தில் கடந்த 3 மாதத்துக்கு முன் திருவள்ளூா் நகராட்சி நிா்வாகம் பூங்காவில் இருந்த 25-க்கும் மேற்பட்ட மரங்களை, அழகிய செடிகளை அழித்துவிட்டு, வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வணிக வளாகம் எந்த திட்டத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டடம் கட்ட நகா்மன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதா என்றால் அதற்கும் அதிகாரிகள் பதில் கூற மறுக்கின்றனராம்.
எனவே, பூங்காவை அழித்து விதி மீறி கட்டடம் கட்டும் பணியை நிறுத்தி பூங்காவை பாதுகாக்கவும், திருவள்ளூா் நகராட்சி ஆணையா் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், மதிமுகவைச் சோ்ந்த பாபு, விசிக மாவட்ட செயலாளா் தளபதி சுந்தா், சிபிஐ மாவட்டச் செயலாளா் கஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் குழு செயலாளா் நீலவானத்து நிலவன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினா்கள் என்.கீதா, இ.எழிலரசன், கே.செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.