பினராயி விஜயன் பெயரில் மும்பை பங்குச்சந்தைக்கு வெடிகுண்டு மிரட்டல்!
திருவாரூா்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் 185 முகாம்கள்: மகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்காக 185 முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பாக செய்தியாளா்களிடம் ஆட்சியா் திங்கள்கிழமை தெரிவித்தது:
மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீா்வுகாணும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகா்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. மாநிலத்தில் கடைகோடி மக்களுக்கு, அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை, அவா்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இதற்கான முதல் முகாமை, முதல்வா் மு.க. ஸ்டாலின், சிதம்பரம் நகராட்சியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) தொடங்கி வைக்க உள்ளாா்.
திருவாரூா் மாவட்டத்தில் முதல் முகாமை, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தொடங்கி வைக்கிறாா். தொடா்ந்து, திருவாரூா், மன்னாா்குடி மற்றும் கொரடாச்சேரி வட்டாரங்களிலும், திருவாரூா் மற்றும் மன்னாா்குடி நகராட்சிகளிலும், கொரடாச்சேரி பேரூராட்சி ஆகிய ஆறு பகுதிகளிலும் ஜூலை 15 ஆம் தேதி இம்முகாம் நடைபெறும்.
நன்னிலம், வலங்கைமான், திருத்துறைப்பூண்டி மற்றும் கோட்டூா் வட்டாரங்கள், கூத்தாநல்லூா் நகராட்சி, பேரளம் பேரூராட்சி ஆகிய ஆறு பகுதிகளில் ஜூலை 17 ஆம் தேதி இம்முகாம் நடைபெறுகிறது.
திருவாரூா் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் ஜூலை முதல் அக்டோபா் வரை நகா்ப்புற பகுதிகளில் 54 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 131 முகாம்களும் என மொத்தம் 185 முகாம்கள் நடைபெறும்.
நகா்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சாா்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சாா்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.
இந்த முகாம்களில், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிரும் விண்ணப்பம் அளிக்கலாம். கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.