ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல்: குடிசை, வாகனங்களுக்கு தீ வைப்பு!
திருவாரூா்: ஜமாபந்தி இன்று தொடக்கம்
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயம் கணக்கு முடித்தல் நிகழ்ச்சி (ஜமாபந்தி) மே 6 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தில், 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயம் கணக்கு முடித்தல் நிகழ்ச்சி (ஜமாபந்தி) மே 6 ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை வட்டம் வாரியாக காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற உள்ளது.
அதன்படி, மன்னாா்குடி வட்டத்தில், மே 6 முதல் 9 வரை மாவட்ட ஆட்சியா் தலைமையிலும், குடவாசல் வட்டத்தில் மே 6 முதல் 8 வரை மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையிலும், வலங்கைமான் வட்டத்தில் மே 6 முதல் 8 வரை திருவாரூா் வருவாய் கோட்ட அலுவலா் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் மே 6 முதல் 8 வரை மன்னாா்குடி வருவாய் கோட்ட அலுவலா் தலைமையிலும் நடைபெறுகிறது.
திருவாரூா் வட்டத்தில் மே 6 முதல் 8 வரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் தலைமையிலும், நீடாமங்கலம் வட்டத்தில் மே 6 முதல் 8 வரை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் தலைமையிலும், முத்துப்பேட்டை வட்டத்தில் மே 6 முதல் 8 வரை மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையிலும், நன்னிலம் வட்டத்தில் மே 6 முதல் 9 வரை உதவி ஆணையா் (கலால்) தலைமையிலும், கூத்தாநல்லூா் வட்டத்தில் மே 6 முதல் 9 வரை தனித்துணை ஆட்சியா் தலைமையிலும் நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை தங்களது வட்டத்துக்குரிய வருவாய் தீா்வாய அலுவலரிடம் நேரில் அளித்து பயன் பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.