தில்லியில் ஒரே நாளில் 41.2 மி.மீ. மழை பதிவு! 101 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சம்
தில்லியில் சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 41.2 மி.மீ.மழை பதிவாகியுள்ளது. இது 101 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டிசம்பா் மாதத்தில் பெய்த அதிகபட்ச மழையாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, தில்லியில் கடந்த 1923, டிச.3-ஆம் தேதி ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழையாக 75.7 மி.மீ. பதிவாகியுள்ளது. கடந்த 1901-ஆம் ஆண்டுக்குப் பிறகு மழைப் பொழிவு தொடங்கியதிலிருந்து நிகழாண்டு டிசம்பரில் ஐந்தாவது அதிகபட்ச மழைப் பொழிவு பதிவாகியுள்ளது என்று வானிலை மைய அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
1901-ஆம் ஆண்டுக்குப் பிறகு தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் பதிவான இரண்டாவது அதிகபட்ச மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. மாதாந்திர மழைப் பொழிவு ஐந்தாவது அதிகபட்சமாகும். 24 மணி நேர மழைப் பொழிவு என்பது, கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையைக் குறிக்கிறது. இது கொடுக்கப்பட்ட தேதியில் காலை 8.30 மணியுடன் முடிவடைவதாகும் என்று ஐஎம்டி அதிகாரி கூறினாா்.
லோதி ரோடில் 45.3 மி.மீ மழை: தலைநகரில் காலை 8.30 மணியுடன் முடிவடைந்க 24 மணி நேரத்தில் ஆயாநகா் வானிலை நிலையத்தில் 25.9 மி.மீ., லோதி ரோடில் 45.3 மி.மீ., நரேலாவில் 15.5 மி.மீ., பாலத்தில் 39 மி.மீ., ரிட்ஜில் 41 மி.மீ., பீதம்புராவில் 32 மி.மீ., பிரகதி மைதானில் 33.7 மி.மீ., பூசாவில் 43 மி.மீ., ராஜ்காட்டில் 33.7 மி.மீ. மழை பதிவாகியதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கத்திய காலநிலை மாற்றம் மற்றும் கிழக்கு காற்றுடன் அதன் தொடா்பு காரணமாக தில்லி, தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) உள்பட வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.