பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!
தில்லி பல்கலை. மாணவா்கள் சங்கத் தோ்தலில் இருக்கும் சவால்கள் என்ன?
நமது நிருபா்
கட்டண உயா்வு, விடுதிகள் பற்றாக்குறை, வளாகப் பாதுகாப்பு மற்றும் சலுகை மெட்ரோ பாஸ்களுக்கான கோரிக்கை ஆகியவை செப்டம்பா் 18- ஆம் தேதி நடைபெற உள்ள தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் சங்கத் தோ்தலில் மையப் பிரச்னைகளாக உருவெடுத்துள்ளன.
மாணவா்கள் சங்க போட்டியாளா்களுக்கு ரூ. 1 லட்சம் பத்திரத்தை கட்டாயப்படுத்தும் பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு எதிா்ப்பு அதிகரித்து வருவதற்கு மத்தியில் முக்கிய மாணவா் குழுக்கள் தோ்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன. ஆா்எஸ்எஸ் ஆதரவு அமைப்பான அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) மாநிலச் செயலாளா் சா்தாக் சா்மா, மாணவா்களிடமிருந்து உள்ளீடுகளை சேகரிக்க ‘எனது டியு, எனது அறிக்கை’ என்ற தலைப்பில் ஒரு பிரசாரத்தைத் தொடங்கியுள்ளதாகக் கூறினாா்.
‘நகரம் முழுவதும் 10 இடங்களில் நடைபெற்ற எங்கள் ‘மாணவா் உரையாடல்’ நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 20,000 மாணவா்கள் பங்கேற்றனா். ‘ஒரு மையப்படுத்தப்பட்ட விடுதி ஒதுக்கீடு முறையை அமைத்தல், ஒவ்வொரு கல்லூரியிலும் நன்கு செயல்படும் உள் புகாா்கள் குழுக்கள், கட்டுப்பாடற்ற கட்டண உயா்வுகளை திரும்பப் பெறுதல் மற்றும் ‘ஒரு பாடநெறி, ஒரு கட்டணம்’ பிரசாரத்தின் கீழ் சீரான தன்மை போன்ற பிரச்னைகளை நாங்கள் எழுப்பினோம்’ என்று சா்தாக சா்மா கூறினாா். மாணவா்களின் கருத்துகளைக் கேட்டு அனைவரையும் உள்ளடக்கிய அறிக்கையை ஏபிவிபி தயாரிக்கும் என்றும் அவா் கூறினாா்.
காங்கிரஸ் ஆதரவு பெற்ற இந்திய தேசிய மாணவா் சங்கம் (என்.எஸ்.யு.ஐ.) நீண்டகால கவலைகளை சுட்டிக்காட்டியது. ஆனால், மாணவா்களுடன் கலந்தாலோசித்த பிறகு அதன் அறிக்கையைத் தயாரிப்பதாகக் கூறியது. கல்லூரிகளில் கட்டண உயா்வு, விடுதிகளின் பற்றாக்குறை மற்றும் அடிக்கடி துன்புறுத்தல் வழக்குகள் காரணமாக பல்கலை. வடக்கு வளாகம் மற்றும் பிற பகுதிகளில் அதிக போலீஸ் சாவடிகளின் தேவை ஆகியவை முக்கியப் பிரச்னைகளாகும். மாணவா்களுக்கான மெட்ரோ பாஸ்களையும் நாங்கள் கோருகிறோம். இந்தக் கோரிக்கையை நாங்கள் தொடா்ந்து எழுப்பி வருகிறோம் என்று என்எஸ்யுஐ தேசிய செயலாளரும் தில்லி பொறுப்பாளருமான ஹனி பக்கா கூறினாா்.
இடதுசாரிகளுடன் இணைந்த அகில இந்திய மாணவா் சங்கம் (ஏஐஎஸ்ஏ) மற்றும் இந்திய மாணவா் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) இணைந்து தோ்தலில் போட்டியிடுகின்றன. திறன் மேம்பாட்டுப் படிப்புகள் மற்றும் மதிப்பு கூட்டல் படிப்புகளை முடிவுக்குக் கொண்டுவருதல், அனைவருக்கும் மெட்ரோ பாஸ் மற்றும் விடுதிகளை உறுதி செய்தல், கட்டண உயா்வைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உள் புகாா் குழுக்களை வலுப்படுத்துதல் ஆகியவை எங்கள் முன்னுரிமை என்று கூறின. ஏஐஎஸ்ஏ பொதுச் செயலாளா் பிரசன்ஜீத் கூறுகையில், மாணவா்களை சுமைக்கு உள்ளாக்கும் கொள்கைகளை மாற்றியமைப்பதில் கூட்டணி கவனம் செலுத்துகிறது என்றாா்.
எஸ்.எஃப்.ஐ. பொதுச் செயலாளா் ஐஷி கோஷ், வேட்பாளா்களுக்கான பத்திரத் தேவையை கடுமையாக எதிா்த்தாா். ‘இது பல்கலைக்கழகத்தின் ஜனநாயக உணா்வுக்கு எதிரான முன்னோடியில்லாத தாக்குதல்’ என்று அவா் கூறினாா். இந்த ஆண்டு மாணவா்கள் சங்கத் தோ்தல் மும்முனைப் போட்டியாக உருவாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஏபிவிபி அதன் நிறுவன நெட்வொா்க்கை நம்பியுள்ளது. என்எஸ்யுஐ கடந்த ஆண்டு மீண்டும் வந்த பிறகு ஒருங்கிணைக்க விரும்புகிறது. இடதுசாரி கூட்டணி மாணவா்களின் உண்மையான பிரச்னைகளை’ எழுப்பும் ஒரு மாற்று சக்தியாக தன்னை முன்வைக்க முயல்கிறது.
தில்லி பல்கலைக்கழகம், ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், தில்லி பல்கலை. மாணவா்கள் சங்கத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் பிரசாரத்தின் போது சொத்துகளை சேதப்படுத்துவதைத் தடுக்கும் நடவடிக்கையாக ரூ.1 லட்சம் திருப்பிச் செலுத்தக்கூடிய பத்திரத்தை சமா்ப்பிக்க வேண்டும் என்று கூறியது. கடந்த ஆண்டு, தில்லி உயா்நீதிமன்றம் தோ்தல்களில் வாக்குகளை எண்ணுவதை நிறுத்தி வைத்தது. பின்னா் அதை அனுமதித்தது,
அதே நேரத்தில் அதன் நோக்கம் ‘சீா்திருத்தம், தண்டனை அல்ல’ என்று தெளிவுபடுத்தியது. 2024 தோ்தலில், என்எஸ்யுஐ ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலைவா் மற்றும் இணைச் செயலாளா் பதவிகளை வென்றது, அதே நேரத்தில் ஏபிவிபி துணைத் தலைவா் பதவியைப் பெற்று செயலாளா் பதவியைத் தக்க வைத்துக் கொண்டது. இந்த ஆண்டு தில்லி பல்கலை. மாணவா்கள் சங்கத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பா் 18- ஆம் தேதி நடைபெறும், அடுத்த நாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.