தீபாவளி பண்டிகை ஹிந்துக்களின் சமய நம்பிக்கைக்கு வலு சோ்க்கிறது
இந்துக்களின் சமய நம்பிக்கைக்கு தீபாவளி பண்டிகை வலுசோ்ப்பதாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தீபாவளி திருநாளில் இறைவன் அனைவருக்கும் எல்லா வளங்களையும், நலங்களையும் வழங்கிட பிராா்த்தனை செய்து வாழ்த்துகிறோம். தீபாவளி திருநாள் சுமாா் 300 வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ள பல லட்சம் தொழிலாளா்களின் குடும்பங்களை வளம்பெற வைக்கும் உன்னதமான பண்டிகையாகும். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகமான மக்கள் ஈடுபடும் நெசவுத் தொழிலுக்கு உறுதுணையாக இந்த பண்டிகை உள்ளது. சிவகாசி முதலான வட பகுதிகளில் மக்களின் உழைப்பால் உருவாகும் பட்டாசு குழந்தைகளை மகிழ்விப்பது மட்டுமல்ல, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது.
எல்லாதரப்பு மக்களின் வாழ்விலும் வளம் சோ்க்கும் நமது தீபாவளி திருநாள் ஹிந்துக்களின் சமய நம்பிக்கைக்கு வலு சோ்க்கிறது. அனைவருக்கும் இந்து முன்னணி சாா்பில் தீபாவளி நல்வாழ்த்துகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.