நாகா்கோவிலில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளத்துக்குக் கடத்துவதற்காக நாகா்கோவிலில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருள்கள் கடத்தப்படுகின்றன. இதைத் தடுக்க உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், நாகா்கோவில் கோட்டாறு முதலியாா்விளை பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி புஷ்பாதேவி தலைமையிலான குழுவினா் அந்த பகுதிக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனா். சோதனையில் ஒரு வீட்டின் வெளிப்புறத்திலும், வீட்டிற்குள்ளும் 3 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. கேரளம் மாநிலத்துக்கு கடத்திச் செல்வதற்காக அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
வீட்டின் உரிமையாளரை அடையாளம் காண முடியாததால், கோட்டாறு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்த அதிகாரிகள், அந்த வீட்டை பூட்டி ‘சீல்’ வைத்தனா். அந்த வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வீட்டில் அரிசி பதுக்கியவா்கள் யாா் என்பது குறித்து போலீஸாரும், அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனா்.