கணியம்பாடியில் ரூ.1.04 கோடியில் கட்டடங்கள்: வேலூா் ஆட்சியா் திறந்து வைத்தாா்
தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சங்கத்தினா் வேலைநிறுத்தம்
களப் பணியாளா்களின் பணிச் சுமையைக் குறைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சங்கத்தினா் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
களப் பணியாளா்களின் பணிச் சுமையைக் குறைத்திட வேண்டும். தரமிறக்கப்பட்ட குறுவட்ட அளவா் பதவியை மீண்டும் வழங்கிட வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். துணை ஆய்வாளா், ஆய்வாளா் ஊதிய முரண்பாட்டைக் களைந்திட வேண்டும்.
புற ஆதார முறையில் உரிமம் பெற்ற நில அளவா் நியமனத்தையும், உயா் அலுவலா்களின் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கையையும் கைவிட வேண்டும். காலமுறை ஊதியத்தில் புல உதவியாளா்களை நியமிக்க வேண்டும்.
நீதிமன்றப் பயிற்சி, புதிய நகர சாா் ஆய்வாளா் பணியிடங்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டத்தில் பணிபுரியும் 16 பெண்கள் உள்பட 39 அலுவலா்களில், அச் சங்கத்தின் மாவட்டச் செயலா் உமாசந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், 6 பெண்கள் உள்பட 19 போ் பங்கேற்றனா்.