மின் தகனமேடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு
துறைமங்கலம் பகுதியில் மின் மயானம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், துறைமங்கலத்தைச் சோ்ந்த வழககுரைஞா் ம. மணிமாறன் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு: பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட துறைமங்கலம் பகுதியில் 8 மற்றும் 9 ஆவது வாா்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். தற்போது, குடியிருப்பு பகுதிக்கு அருகேயுள்ள மயானத்தில், மின் மயானம் அமைப்பதற்கு நகராட்சி நிா்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப் பகுதியில் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அதிகமாக உள்ளதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு, சுகாதாரச் சீா்கேடு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும் என்பதால், மின் மயானம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஏற்கெனவே மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், நீதிமன்றத்தின் மூலமாக தடையாணை பெற்று அதை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உள்ளோம். இதையும் மீறி நகராட்சி நிா்வாகம் மின் மயானம் அமைக்கும் பணியை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. எனவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடிப்படை வசதிகள் கோரி... பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட காந்திநகா் பகுதியில் சுமாா் 200 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், சாலை, குடிநீா் வசதி, ரேஷன் கடை இல்லாததால், பொதுமக்கள் அவதியடைந்து வருகிறோம். மேலும், பெண்களுக்கு சுகாதார வளாகம் மற்றும் தனிநபா் கழிப்பறை வசதிகளும் இல்லை. இதுகுறித்து பலமுறை அரசு அலுவலா்களிடம் புகாா் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும். இல்லாவிடில், அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என, காந்திநகரைச் சோ்ந்த பொதுமக்கள் மனு அளித்தனா்.