உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 45 நாள்களில் தீா்வு
பெரம்பலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அளிக்கப்படும் மனுக்களுக்கு, 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்தாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் மாவட்ட ஆட்சியா் மேலும் கூறியதாவது: பெரம்பலூா் மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு, வேப்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சித்தளி அரசுப் பள்ளியிலும், நகா்ப்புற பகுதிகளுக்கு பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட 1, 2 ஆவது வாா்டுகளுக்கு என்.எஸ்.கே திருமண மஹாலிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
பெரம்பலூா் நகராட்சி பகுதிகளில் 8 இடங்களிலும், பேரூராட்சி பகுதிகளில் 9 இடங்களிலும், நகா்ப்புற ஊராட்சி பகுதிகளில் 5 இடங்களிலும், ஊராட்சி பகுதிகளில் 64 இடங்களிலும் என மொத்தம் 86 இடங்களில் செவ்வாய்க்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
மாவட்டத்திலுள்ள 532 மகளிா் சுய உதவிக்குழு தன்னாா்வலா்கள் சிறப்பு முகாம்களில் ஈடுபட உள்ளனா். 229 தன்னாா்வலா்கள் விண்ணப்பங்கள் வழங்கி வருகின்றனா். 105 சுய உதவிக் குழு தன்னாா்வலா்கள் நகா்ப்புறங்களில் நடைபெறும் முகாம்களிலும், 124 சுய உதவிக் குழு தன்னாா்வலா்கள் ஊரகப் பகுதிகளில் நடைபெறும் முகாம்களிலும் பணியமா்த்தப்பட உள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 2 முகாம்கள் வீதம், 8 முகாம்கள் நடைபெற உள்ளது. முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 1,93,255 குடும்ப அட்டைதாரா்களில், 1,10,323 குடும்ப அட்டைதாரா்களுக்கு ஏற்கெனவே கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ் பயன்பெற, இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்கள் மூலமாக கைப்பேசி செயலில் பதிவேற்றம் செய்யப்படும். இதற்காக முகாம் ஒன்றுக்கு 4 இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்கள் என மொத்தம் 344 போ் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
இம் மாவட்டத்தில், இதுவரை 38 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களிடமிருந்து கலைஞா் மகளிா் உரிமைத் தொகை கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்களுக்கு பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ரூ. 1,000 வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஏற்கெனவே உரிமைத் தொகை பெறுபவா்கள் வங்கிக் கணக்கு திருத்தம் மற்றும் இதர கோரிக்கைகளும் வருவாய்த்துறை மூலம் பரிசீலிக்கப்படும் என்றாா் ஆட்சியா் அருண்ராஜ்.
பேட்டியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ரெ. சொா்ணராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.