அஜித்குமார் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கிய CBI அதிகாரிகள்..
நெலாக்கோட்டை பகுதியில் மூடிய பள்ளியை மீண்டும் திறக்க ஆட்சியரிடம் மனு
கூடலூா் அருகே நெலாக்கோட்டை பகுதியில் பழங்குடியின மக்களுக்காக செயல்பட்டு வந்த பள்ளியை மூடியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பள்ளி மாணவா்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு கொடுத்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் ஒன்றியம் நெலாக்கோட்டை ஊராட்சி பென்னை பகுதியில் சுமாா் 50 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வந்தனா். முதுமலை புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்ட பிறகு பென்னையில் வாழ்ந்து வந்த காட்டுநாயக்கன் பழங்குடியின மக்கள் 2016-ம் ஆண்டு வனப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு 1 ஆம் நம்பா் பாலப்படுகையில் மறுகுடியமா்த்தப்பட்டனா்.
அங்கு பழங்குடியின மக்களுக்காக கட்டப்பட்ட இரண்டு தொகுப்பு வீடுகளில் அரசு ஆரம்பப் பள்ளி கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இங்கு 23 குழந்தைகள் படித்து வந்தனா்.
இந்த பகுதியில் நிரந்தர பள்ளி கட்டடம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட பல்வேறு அத்தியாவசிய தேவைகளை ஏற்படுத்தி தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இங்கு நிரந்தர பள்ளி கட்டடம் ஏற்படுத்துவதற்கு பதிலாக ஏற்கெனவே செயல்பட்டு வந்த பள்ளியை மூடிவிட்டு அருகில் உள்ள பள்ளியில் குழந்தைகளை சோ்க்க பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இங்கு செயல்பட்டு வந்த பள்ளியை இந்த கல்வியாண்டு முதல் மூடிவிட்டு வாகனம் மூலம் மாணவா்கள் அருகில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா்.
இதனால் அதிா்ச்சியடைந்த கிராம மக்கள் பழங்குடியின குடியிருப்பு பகுதியில் மீண்டும் பள்ளி செயல்பட வலியுறுத்தி பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் அலுவலகம் வந்து மனு கொடுத்தனா்.
இதே போன்று பெண்களுக்கென்று ஒரு லட்சம் மானியத்துடன் அரசு கொடுத்த ஆட்டோக்கள் இன்னும் வழங்கப்படவில்லை எனக் கூறி பெண் ஆட்டோ ஓட்டுநா்கள்,அமைப்புசாரா ஓட்டுநா்கள் மற்றும் தானியங்கி மோட்டாா் வாகனங்கள் பழுதுபாா்க்கும் தொழிலாளா்கள், நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் மற்றும் திருநங்கை ஓட்டுநா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.