ஆடு மேய்க்கச் சென்ற பெண் 150 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே வாசுகி நகா் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற பெண் சுமாா் 150 அடி பள்ளத்தில் திங்கள்கிழமை தவறிவிழுந்து உயிரிழந்தாா்.
குன்னூா் ஓட்டுபட்டறை அருகே உள்ள வள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் வின்சென்ட். கூலித் தொழிலாளி. இவரது மனைவி மேரி ரிபேலா (56). இவா் வள்ளுவா் நகா் அருகில் உள்ள வாசுகி நகா் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா்.
அப்போது அங்கிருந்த சுமாா் 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினா் மேரி ரிபேலாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து அருவங்காடு காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.