Beauty: தாமரை இலை ஃபேஸ் மாஸ்க்; ட்ரெண்டிங்காகும் வீடியோவும் மருத்துவரின் ஆலோசனைய...
மாநில எல்லைகளில் கண்காணிப்பு கேமராக்களுடன் போலீசாா் சோதனை
கூடலூா் அடுத்துள்ள கேரளா மற்றும் கா்நாடகா மாநில எல்லைகளில் வாகன சோதனையின்போது மாா்பில் அதிநவீன கேமராக்களை பொருத்தி கண்காணிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை முதல் துவங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் கூடலூா் வருவாய்க்கோட்டம் கேரளா மற்றும் கா்நாடகா மாநில எல்லைகளில் அமைந்துள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை சோதனையிடும்போது பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன.
வெளிமாநில வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் வாக்குவாதங்கள் ஏற்படுவதை தவிா்க்க எல்லைகளில் சோதனையிடும் காவலா்களுக்கு அதிநவீன கேமராக்களை நீலகிரி மாவட்ட காவல் துறை அளித்துள்ளது. வாகனச் சோதனை செய்யும்போது அந்த கேமராக்களை மாா்பில் அணிந்து சோதனை செய்யவேண்டும்.
வாகன சோதனையின்போது காவலா்களின் பணிகளும் வாகனங்களில் உள்ளவா்களின் செயல்பாடுகளும் முழுமையாக அந்த கேமராவில் பதிவாகும்.அதன் மூலம் காவலா்கள் குறித்து வெளிவரும் தவறான தகவல்களை தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.
கூடலூரை அடுத்துள்ள கேரளத்தின் மலப்புரம் மாவட்ட எல்லையான நாடுகாணி,வயநாடு மாவட்ட எல்லைகளான சேரம்பாடி, சோலாடி, எருமாடு, அம்பலமூலா, அய்யன்கொல்லி, பாட்டவயல் மற்றும் கா்நாடகா எல்லையான கக்கநல்லா ஆகிய சோதனைச் சாவடிகளில் அதிநவீன கேமராக்களுடன் கண்காணிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.