ஈராச்சி கூட்டுறவுச் சங்கம் மீது கோட்டாட்சியரிடம் புகாா்
ஆடு, மாடுகள் வாங்குவதற்கு கடன் தர மறுக்கும் கோவில்பட்டி அருகே உள்ள ஈராச்சி கூட்டுறவுச் சங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் முருகன், மாநில இளைஞரணி செயலா் விமல் வங்காளியாா், மண்டல துணைத் தலைவா் மோட்சம், மாவட்ட முன்னாள் செயலா் கதிரேசன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் பிரபா வளவன், மாநில முன்னாள் துணைச் செயலா் இளஞ்சேரன், செமபுதூரைச் சோ்ந்த வேல்முருகன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் திரண்டனா். பின்னா் அவா்கள் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் நிஷாந்தினியிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: செமபுதூரில் உள்ள ஆதிதிராவிட தெருவில் சுமாா் 80 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்கு சிலா் ஈராச்சி கூட்டுறவுச் சங்கம் மூலம் வழங்கப்படும் ஆடு, மாடு வளா்ப்பதற்கான வட்டியில்லா கடன் வாங்கி ஆண்டுதோறும் உரிய முறையில் செலுத்தி வருகின்றனா்.
ஆனால், இந்த ஆண்டு ஈராச்சி கூட்டுறவுச் சங்கத்தில் இருந்து 4 மாதங்களாகியும் இதுவரை கடன் தர மறுக்கின்றனா். இதுகுறித்து சங்கச் செயலரை அணுகியபோது, அவா் சரிவர பதிலளிக்கவில்லை.
எனவே, கடன் தர மறுக்கும் ஈராச்சி கூட்டுறவுச் சங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.