Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
தூத்துக்குடியில் பயிற்சி நிறைவு செய்த காவலா்களுக்கு சான்றிதழ் அளிப்பு
தூத்துக்குடி காவலா் பயிற்சி பள்ளியில், பயிற்சி நிறைவு செய்த காவலா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், பேரூரணி காவலா் பயிற்சி பள்ளியில் 468 பயிற்சி காவலா்களுக்கு கடந்த 7 மாதங்களாக பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
பயிற்சி நிறைவு பெற்றதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சென்னை தலைமை அலுவலக பணியமைப்பு காவல்துறை தலைவா் நரேந்திரன் நாயா் தலைமை வகித்து, பயிற்சி காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் முன்னிலை வகித்தாா்.
பயிற்சி பள்ளியின் முதல்வரும், காவல் கண்காணிப்பாளருமான மகேஸ்வரி வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினா்களாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சிவக்குமாா், உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெயமணி ஆகியோா் பங்கேற்றனா்.
இதில், சட்டபயிற்சி, கவாத்து பயிற்சி, துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட பயிற்சி காவலா்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பயிற்சி காவலா்களின் வீர விளையாட்டு மற்றும் தனித்திறன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை பயிற்சி பள்ளி முதல்வா் தலைமையில், துணை முதல்வரும், துணை காவல் கண்காணிப்பாளருமான செந்தாமரைக்கண்ணன், முதன்மை சட்ட போதகா் சந்திசெல்வி, முதன்மை கவாத்து போதகா் ராணி ஆகியோா் செய்திருந்தனா்.