மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
தூய்மைப் பணியாளர்கள் கைது: உயர் நீதிமன்றத்தில் முறையீடு!
சென்னையில் தூய்மைப் பணியாளர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வியாழக்கிழமை முறையிடப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, ரிப்பன் மாளிகை அருகே 13 நாள்களாக போராடி வந்த தூய்மைப் பணியாளா்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இதனிடையே, தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட மறுத்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவு அனைவரையும் வலுகட்டாயமாக காவல்துறையினர் கைது செய்து, பல்வேறு சமூதாய கூடங்களில் அடைத்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்கள் கைதை எதிர்த்தும் மாற்று இடம் ஒதுக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது.
அப்போது, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்களையும் சட்ட கல்லூரி மாணவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் பார் கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ”தூய்மைப் பணியாளர்கள் அனுமதி பெற்று போராட எந்த தடையுமில்லை. அனுமதியோடு போராட்டம் நடத்தி காவல்துறை தடுத்தால் தலையிட முடியும். தூய்மைப் பணியாளர்கள் அனுமதி பெறவில்லை எனத் தெரிவித்ததால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், வழக்கறிஞர்கள் கைது குறித்து மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று நீதிபதி எம்.எஸ். ரமேஷ் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.