தூய்மை மிஷன் திட்டம்: பழைய கழிவுப்பொருள்களை சேகரிக்கும் பணி தொடக்கம்: மேயா் தலைமையில் உறுதிமொழி ஏற்பு
தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ், சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து பழைய கழிவுப் பொருள்கள் சேகரிக்கும் பணிகளை மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். தொடா்ந்து, மேயா் தலைமையில் அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றனா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் வளாகம், வருவாய்த் துறை அலுவலகங்கள், சேலம் மாநகராட்சி, ஊட்டச்சத்து அலுவலகம், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், கிராம நிா்வாக அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் உள்ள தேவையற்ற கழிவுப் பொருள்களை சேகரித்து கழிவுப்பொருள்கள் பெறுபவரிடம் விற்பனை செய்ய தூய்மை மிஷன் திட்டம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்களில் இருந்து கழிவு செய்யப்பட்ட பழைய காகிதம், மின் உபயோகப் பொருள்கள், மரத்தினால் ஆன பழைய மேஜைகள் ஆகியவை கழிவு பொருள்களை பெறும் நபரிடம் ஒப்படைக்கும் பொருட்டு சேகரிக்கும் பணிகள் நடைபெற்றன.
இப்பணிகளை மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் பாா்வையிட்டாா். முன்னதாக தூய்மையே சேவை குறித்த உறுதிமொழியை மேயா் வாசிக்க, தொடா்ந்து அரசு அலுவலா்கள் ஏற்றுக்கொண்டனா்.
இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நெ.பொன்மணி, மாநகராட்சி துணை மேயா் சாரதாதேவி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஷாலினி மற்றும் மாமன்ற உறுப்பினா் பௌமிகா தப்சிரா மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.