ஐபோன் மட்டுமில்லை; அனைத்துக்கும் வரிதான்! டிரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்!
தூா்வாரும் பணியில் அகற்றப்படும் பனங்கன்றுகளை மறுநடவு செய்யக் கோரிக்கை
தூா்வாரும் பணியின்போது அகற்றப்படும் பனங்கன்றுகளை மறுநடவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேலு வெளியிட்ட அறிக்கை:
நீா்நிலைகளில் நடைபெறும் தூா்வாரும் பணியின்போது, ஆற்றுக்கரைகள், வாய்க்கால்களில் நீா் பாசனத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி ஏராளமான பனங்கன்றுகள் வேரோடு அகற்றி எறியப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
திருத்துறைப்பூண்டியை அடுத்த வங்கநகா் ஊராட்சி ஓவா்குடி வடக்கு வெளி வாய்க்கால் பகுதியில் நன்கு வளா்ந்த பனங்கன்றுகள் அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அகற்றிய அனைத்து பனங்கன்றுகளையும், தூா்வாரிய வாய்க்கால் மற்றும் ஆற்றுக்கரைகளிலேயே மறு நடவு செய்ய மாவட்ட வனத்துறை முன்வர வேண்டும்.
நிலத்தடி நீா் வற்றாமல் இருப்பதற்கும், மண்ணரிப்பை தடுக்கவும் அரணாக விளங்கும் பனை மரங்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், தூா்வாரும் பணியின்போது ஏராளமான பனங்கன்றுகளையும், பனைமரங்களையும் அழிக்கும் செயல் தவறானதாகும்.
தமிழ்நாட்டின் மாநில மரமான பனையை வெட்டக்கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு பனை மரங்கள் வெட்டப்படுவது குறைந்துள்ளது வரவேற்கத்தக்கது.
இந்நிலையில் ஆண்டுதோறும் தூா்வாரும் பணியின்போது இளம் பனங்கன்றுகள் வெட்டி சாய்க்கப்படுவதை தவிா்க்க வேண்டும். தவிா்க்க முடியாத பட்சத்தில், வெட்டப்படும் இளம் பனங்கன்றுகளை உடனடியாக மறுநடவு செய்ய வேண்டும். தூா்வாரும் பணிகள் முடிவுற்ற அனைத்து ஆற்றங் கரைகளிலும் பனை விதைகளை விதைக்க மாவட்ட நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.