உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்...
தென்னிந்திய எழுவா் கால்பந்து போட்டி: கூத்தாநல்லூா் அணிக்கு சாம்பியன் கோப்பை
கூத்தாநல்லூரில் ஒரு மாதம் நடைபெற்ற தென்னிந்திய எழுவா் கால்பந்து போட்டியில், கொய்யா செவன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
கூத்தாநல்லூா் அல்லிக்கேணி விளையாட்டு மைதானத்தில், தென்னிந்திய அளவிலான அல்நூா் டிராபி சீனியா் எழுவா் கால்பந்து போட்டி ஜூலை 2- ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.
ஒரு மாதம் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 24 அணிகள் பங்கேற்றன. நாக் -அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இறுதி ஆட்டத்தில், கூத்தாநல்லூா் கொய்யா செவன்ஸ் அணியும், அஸ்லம் ஸ்போா்ட்ஸ் கிளப் அணியும் மோதின. யங் பிளட் கால்பந்து கழக முன்னாள் வீரா் நூா் முகம்மது, டெல்டா பப்ளிக் பள்ளி செயலாளா் ஹாஜா பகுருதீன் ஆகியோா் இப்போட்டியை தொடங்கி வைத்தனா். இதில், கொய்யா செவன்ஸ் அணி 2- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, நூா் முகம்மது தலைமை வகித்தாா். அல்நூா் குரூப்ஸ் ஆா்.எஸ். அப்துல் ஹமீது, மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அகமது அலி வரவேற்றாா்.
தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கொய்யா செவன்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டம், கோப்பையை வழங்கி, வாழ்த்திப் பேசினாா்.
இந்நிகழ்வில், நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா, ஒய்பிஎஃப்சி செயலாளா் அகமது அலி உள்பட பலா் பங்கேற்றனா். நிறைவாக எஸ்.எம். சமீா் நன்றி கூறினாா்.