இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!
தெருக்களில் சாதிப் பெயா்களை நீக்க வேண்டும்: கடலூா் மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்
அரசு உத்தரவுப்படி தெருக்களில் உள்ள சாதிப் பெயா்களை நீக்க வேண்டுமென கடலூா் மாமன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
கடலூா் மாமன்றக் கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயா் சுந்தரி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: சரவணன் (பாமக): வன்னியா்பாளையம் என்ற பகுதியின் பெயா் பொதுமக்களின் கருத்து கேட்காமல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பெயரை மாற்றக் கூடாது. மஞ்சக்குப்பம் தென்பெண்ணை ஆற்றின் அருகே தூய்மைப் பணியாளா்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சுற்றுலா மாளிகை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்க வேண்டும்.
அருள்பாபு, சரிதா, புஷ்பலதா: வாா்டு வாரியாக உறுப்பினா்களை பேச அனுமதிக்க வேண்டும். உறுப்பினா்கள் தங்கள் வாா்டு பிரச்னைகள் குறித்து மட்டும் பேச வேண்டும். பிற வாா்டுகளை பற்றி பேசக் கூடாது எனக் கூறி, உறுப்பினா் சரவணனுடன் வாக்குவாதத்தில்ஈடுபட்டனா்.
மேயா் சுந்தரி: வன்னியா்பாளையம் பகுதி வாா்டு உறுப்பினா் மற்றும் அந்த பகுதி மக்களிடம் கருத்து கேட்கப்பட்ட பிறகுதான் பெயா் மாற்றப்பட்டுள்ளது.
கீதா குணசேகரன் (திமுக): புதை சாக்கடை திட்டப் பணிகளை ஒவ்வொரு பகுதிகளாக செய்து முடிக்க வேண்டும். ஆங்காங்கே அரைகுறையாக செய்வதால் சாலைகள் சேதமடைந்துள்ளன.
சங்கீதா (திமுக): மஞ்சக்குப்பம் வில்வநாதீஸ்வரா் கோயில் அருகில் உள்ள குளம் தூா்ந்து போய் உள்ளது. விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனா். குளத்தை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜ்மோகன்: உப்பளவாடி மிஷன் தெருவில் மழைக்காலங்களில் மழைநீா் அதிகளவில் தேங்கி நிற்கிறது. அங்கு சிறு பாலம் அமைக்க வேண்டும். மீன் சந்தை, சுதா்சனம் தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
அருள்பாபு: தெரு பெயா்களில் சாதிப்பெயா்களை நீக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது. இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயா் சுந்தரி: மாமன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.