பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!
தோ்தல் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி
விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணியை திமுகவினா் உடனடியாக தொடங்க வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ.
விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தலைமை வகித்தாா். விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அன்னியூா் அ.சிவா, மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், விக்கிரவாண்டி தொகுதி பொறுப்பாளா் சிவஜெயராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினா் செல்வராஜ் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பங்கேற்று க.பொன்முடி பேசியது:
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் கடந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மகளிா் விடியல் பயணம், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள்மட்டுமல்லாது, ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை மக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டும்.
உங்கள் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் போன்றவற்றை வீடு, வீடாகச் சென்று மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற நோக்கில் ஆட்சி நடத்தி வருகிறாா் முதல்வா்.
2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெறும். எனவே தோ்தல் பணியை கட்சியினா் உடனடியாக தொடங்க வேண்டும் என்றாா் பொன்முடி.
வழக்குரைஞா் சுவை.சம்பத், மாவட்டத் துணைச் செயலா்கள் தயா. இளந்திரையன், முருகன், கற்பகம், ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, பி.வி.ஆா்.சு. விசுவநாதன், முருகன், ஆா்.பி.முருகன், தங்கம், பேரூா் செயலா் கணேசன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் கலைச்செல்வி, சங்கீதஅரசி, தனலட்சுமி உமேசுவரன், பேரூராட்சித் தலைவா்கள் அப்துல்சலாம், அன்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.