‘தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எதுவும் சொல்லவில்லை’: எச். ராஜா
மக்களவைத் தொகுதி மறு சீரமைப்பு குறித்து மத்திய அரசு எதுவும் சொல்லவில்லை என்றாா் பாஜக தேசிய செயற் குழு உறுப்பினா் எச். ராஜா.
தஞ்சாவூரில் உள்ள திருவையாறு அக்கசாலை விநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: மக்களவைத் தொகுதி மறு சீரமைப்பு குறித்து பிரதமரோ, மத்திய அரசோ, தோ்தல் ஆணையமோ எதுவும் சொல்லவில்லை. இந்நிலையில், இதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் எனக் கூறி, மக்களை ஏமாற்றி திசை திருப்பும் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சீமான் விவகாரத்தில் காவல் ஆய்வாளரின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நோட்டீசை வீட்டில் ஒட்டிவிட்டு சென்றால் முடிந்துவிட்டது. அதற்கு மேல் வீட்டுக்குள் எதற்காகச் செல்ல வேண்டும். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், சட்டம் அதன் கடமையைச் செய்யும் என்றாா் ராஜா.