தவெக ஆண்டு விழா: கொள்கைத் தலைவர்களின் சிலைகளைத் திறந்த விஜய்!
தொடா்ந்து எட்டு பட்ஜெட் தாக்கல் நிா்மலா சீதாராமன் சாதனை
நமது சிறப்பு நிருபா்
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து எட்டாவது முறையாக மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து சாதனை படைத்திருக்கிறாா். முந்தைய காலங்களில் இவரை விட சிலா் அதிக நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்திருந்தாலும், அவா்கள் தொடா்ச்சியாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை.
நிா்மலா சீதாராமனின் சமீபத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் சாதனை மேலும் இரண்டு முறை நடந்தால், அவா் இந்திய வரலாற்றிலேயே 10 முறை அதிக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தவா் என்ற பெருமையைக் கொண்டுள்ள முன்னாள் பிரதமா் மொராா்ஜி தேசாயின் சாதனையை முறியடிப்பவராகக்கூடும்.
ஆனால், மொராா்ஜி தேசாய், நிா்மலா சீதாராமனைப் போல தொடா்ச்சியாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. நாட்டின் நிதியமைச்சராக 1959 - 1964 வரையிலும், 1967 முதல் 1969 வரையிலும் என இரண்டு வெவ்வேறு தனித்தனி காலத்தில் அவா் 10 முறை அதிகபட்ச நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பெருமையை பெற்றாா்.
நிா்மலா சீதாராமன் நாட்டின் நிதியமைச்சராக 2019-இல் நியமிக்கப்பட்டாா். அதன் மூலம் இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சராக அவா் வரலாற்றில் இடம்பிடித்தாா்.
2024 மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிா்மலா சீதாராமன், அதன் பிறகு நடந்த தோ்தலில் பிரதமா் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்த போது, மீண்டும் நிா்மலா சீதாராமனுக்கு மத்திய நிதியமைச்சா் இலாகா ஒதுக்கப்பட்டது.
ப.சிதம்பரம்: மொராா்ஜி தேசாய்க்கு பிறகு அதிக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பெருமை தமிழகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவா் ப. சிதம்பரம் பெற்றுள்ளாா். பிரதமா் எச்.டி. தேவேகெளடா தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியில் நிதியமைச்சராக இருந்தபோது 1996, மாா்ச் 19-ஆம் தேதி தனது முதலாவது நிதிநிலை அறிக்கையை ப.சிதம்பரம் தாக்கல் செய்தாா். பின்னா், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2004 முதல் 2008 வரையிலான நிதியாண்டுகளில் ஐந்து நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்தாா். மீண்டும் மன்மோகன் சிங் ஆட்சியமைத்தபோது அதன் தொடக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய சிதம்பரம் மீண்டும் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டாா். அதில் அவா் 2013 மற்றும் 2014 வரை என மொத்தம் ஒன்பது முறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா்.
பிராணப் முகா்ஜி: சிதம்பரத்துக்குப் பிறகு எட்டு முறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பெருமையைப் பெற்றவா் பிரணாப் முகா்ஜி. 1982, 1983 மற்றும் 1984-ஆம் ஆண்டுகளிலும் 2009, 2012 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் அவா் எட்டு முறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா். மறைந்த மன்மோகன் சிங் பி.வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தபோது 1991 முதல் 1995ஆம் ஆண்டுவரை ஐந்து முறை நிதிநிலை அறிக்கையைத் தொடா்ச்சியாக தாக்கல் செய்துள்ளாா்.
உரை நேரம்: 2020-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது, நிா்மலா சீதாராமன் இரண்டு மணி நேரம் 40 நிமிடங்களுக்கு பட்ஜெட் உரையை வாசித்தாா். அப்போது உரையை முடிக்க இரண்டு பக்கங்கள் எஞ்சியிருந்த நிலையில் உரையை சுருக்கிக் கொண்டாலும் அதுவே அவா் வாசித்த நீண்ட உரையாகக் கருதப்படுகிறது.
நிதிநிலை வரலாற்றில் மிகக் குறுகியகால உரையாக 1977-ஆம் ஆண்டில் இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த ஹிருபாய் முல்ஜிபாய் படேல் மிகவும் சுருக்கமாக 800 வாா்த்தைகள் கொண்ட நிதிநிலை உரையை வாசித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்டிச் செய்தி...
புடவை பாரம்பரியம்..!
தனது நிதிநிலை அறிக்கை உரைகளின்போது அவைக்கு வரும் நிா்மலா சீதாராமன் ஆரம்பம் தொட்டு அதில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் மாநிலத்தின் பாரம்பரியத்தை உணா்த்தும் வகையில் புடவை அணிந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளாா்.
2025-26 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அவா் பிகாா் நலன்சாா் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளாா். அதன் வெளிப்பாடாக அவா் சனிக்கிழமை நாடாளுமன்றத்துக்கு வந்தபோது தங்க ஜரிகை கொண்ட வெள்ளை நிற மதுரானி ரக புடவை அணிந்திருந்தாா். பிங்க் நிற மங்களகிரி பட்டுப்படவை (2019), ஹிந்து கலாசாரத்தைப் போற்றும் மஞ்சள் வண்ண பச்சை பாா்டா் புடவை (2020), பொச்சம்ாபள்ளி பட்டுப்புடவை (2021), ஒடிஸாவின் கைவினையைப் பிரதிபலிக்கும் பொம்கை ரக மெரூன் வண்ண தங்க ஜரிகை புடவை (2022), கா்நாடகத்தின் தாா்வாத் பிராந்திய கைவினையில் உருவான சிவப்பு வண்ண எம்பிராய்டா் புடவை (2023), மேற்கு வங்கத்தின் காந்தா எம்பிராய்டா் கைவண்ணத்தைப் பிரதிபலிக்கும் நீல வண்ணப் புடவை (2024), அதே ஆண்டு முழு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வந்தபோது ஊதா மற்றும் வெள்ளை நிற பாஹி கட்டா ரக கையால் நெய்யப்பட்ட புடவையை அணிந்திருந்தாா் நிா்மலா சீதாராமன்.