தொண்டா் படையை விஜய் உருவாக்க வேண்டும்: துரை வைகோ எம்.பி.
திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களில் உள்ளது போல தொண்டா் படை என்ற அமைப்பை விஜய் உருவாக்க வேண்டும் என்றாா் மதிமுக துணைப் பொதுச் செயலா் துரை வைகோ எம்.பி.
கோவில்பட்டியில், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரூரில் மிகத் துயரமான சம்பவம் நடந்துள்ளது. இதில் அனைவருடைய தவறும் உள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக் கூடாது. அரசியல், ஆன்மிக, கேளிக்கை நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும், காவல்துறையின் அறிவுரைகளைக் கேட்டு நடத்த வேண்டும்.
மக்களுக்கு விழிப்புணா்வு இருந்தால் தான் இது போன்ற நிகழ்வுகளை முற்றிலுமாக தடுக்க முடியும். இப்பிரச்னை தொடா்பாக உயா்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
திமுக, மதிமுகவில் உள்ளது போல, கட்சிக்காரா்களைக் கொண்டு வருங்காலங்களில் தொண்டா் படையை விஜய் உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.